Friends from Life

Welcome Friends , Let us start to built a new GE-Life virtual team .

More About Me...

Friends from life for ever

Another Tit-Bit...

Bangalore - Silicon Valley of India

ஈருருளி




ஈருருளி

-இரமேஷ் பக்கிரிசாமி








அந்த மிதிவண்டியை அப்படியும்  இப்படியுமாக பார்க்கிறான் சேந்தன். அவனுக்கு அப்படி ஒரு மட்டற்ற மகிழ்ச்சி. இன்னைக்கு இந்த ஊர்ல இருக்கிற நாலு தெருவையும் இரண்டு முறையாவது சுற்றி வர வேண்டும் என்று சிந்தித்துக்கொண்டே அந்த மிதிவண்டியை தொட்டுப்பார்க்கிறான். அவனால் நம்பவே முடியவில்லை. அப்பா திடிர்னு இப்படி ஒரு புது மிதிவண்டி வாங்கிக்கொடுப்பார் என்று.

அவன் ஆசையெல்லாம் ஆசிரியர் குமரப்பனின் அந்த பழைய மிதிவண்டிதான். சரி இப்படியே எவ்வளவு நேரம் பார்ப்பது, வண்டியை எடுத்துக்கொண்டு ஓரு சுற்று சுற்றிவிட்டு வரலாம் என்று அதன் மேல் கைவைத்தபோது பெரும் சத்தம். "சேந்தா... சேந்தா.. நீ இன்னும் எழுந்திரிக்கலயா என்ற அப்பாவின் அதட்டல்.  போர்த்தியிருந்த வேட்டியை சட்டென நீக்கிவிட்டு திண்ணையை வெறித்துப் பார்த்தான் சேந்தன், அவன் கனவில் கண்ட அந்த புது மிதிவண்டி இருந்த இடத்தில் அப்பாவின் கைக்கம்பு சார்த்தியிருந்தது. 

ஆறு மணியாவுது இன்னும் என்ன தூக்கம் என்று கழுவிய முகத்தை துடைத்துக்கொண்டே உள்ளே வந்தார் அப்பா முனியப்பன். இரவு முழுவதும் அழைந்து திரிந்த களைப்பு அப்பா முனியப்பனின் முகத்தில் நன்றாக தெரிந்தது. அப்பா முனியப்பன் ஊர்தலையாரி. நாள் முழுவதும் ஊர் சுற்றுபவர். ஒரு நாளைக்கு ஒரு முறையோ இரு முறையோ வீட்டுப்பக்கம் தலையைக் காட்டுவார். அவர் வந்தாரா இல்லையா என்பது திணையில் உள்ள உரலை பார்த்தாலே தெரிந்துவிடும். வயல் வெளியில் கிடைக்கும் எதையாவது ஒன்றை குழந்தைகளுக்காக கொண்டுவந்து போட்டிருப்பார். இலந்தைப்பழம், நெல்லிக்காய், காரப்பழம், நுங்கு, நிலக்கடலை இப்படி எதையாவது ஒன்றை எடுத்து  வராமல் வீடு வருவதில்லை. சில நேரங்களில் அன்றைய உணவுக்கான வாத்து, மீன், மாடையான், கோழி என்று எதையாவது  சிலதையும் கோரையில் கோர்த்து எடு த்து வந்து வீட்டு இரப்பில்(கூரையில்) மாட்டிவிடுவார்.


சேந்தன் கனவில் கண்ட மிதிவண்டியை நினைத்துக்கொண்டே எழுந்தான். அருகில் படுத்திருந்த தம்பி ஆவணியப்பன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். போர்த்தியிருந்த வேட்டியை கொடியில் போட்டுவிட்டு வெளியே வந்து கொல்லைப்புறம் போனபோது, அம்மா செந்தாமரையும் தங்கச்சி கண்ணகியும் ஆடு மாடுகளை கொட்டகையில் இருந்து அவிழ்த்து வெளியே விரட்டிக்கொண்டிருந்தார்கள். சேந்தனை பார்த்த அம்மா "சேந்தா இங்கே வா... இதையெல்லாம் ஒட்டிட்டுபோய் ஏரிக்கரையில் விட்டுட்டு வா..." என்று கூறிக்கொண்டே கொட்டகையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். கண்ணகி ஆடுகளை விரட்டுவதற்காக கையில் எடுத்த செங்கல்லை பல் துலக்குவதற்காக பாறாங்கல்லில் தோய்த்துகொண்டிருந்தாள்.

அவரகள் குடியிருக்கும் அழகிய ஊர் செம்மானம். செம்மை வனம் பின்னாளில் செம்மானம் ஆனது. அப்பா முனியப்பன் ஊர் தலையாரி. அம்மா ஆடு மாடுகளை பராமரித்துக்கொண்டு வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டாள். சனி, ஞாயிறு  என்றால் பிள்ளைகள் வீட்டில் இருப்பதால் வயல் வேலைக்கு செல்வது வழக்கம். அமமா ஊதியமும், ஆடு மாடுகளில் இருந்து வரும் சிறு வருமணமும்தான் குடும்பத்தின் அன்றாட செலவிற்கு. அப்பாவுக்கு ஆண்டுக்கு ஒரு முறைதான் வருமானம். அதுவும் அந்த ஆண்டு நன்றாக மழை பெய்து பயிர் செழித்து வந்தால் ஒரு காணிக்கு 1 கலம் நெல் வீதம் கிடைக்கும். அறுவடை நன்றாக இருந்தால் ஆண்டிற்கு 30 மூட்டை வரை கிடைக்கும். சாப்பாட்டிற்கு 10 மூட்டை போக மீதம் உள்ளதை விற்பதில் கிடைக்கும் வருமானம்தான் அந்த ஆண்டு முழுவதும்.

சேந்தன் வீடு திரும்பி வந்தபோது தம்பி அவனியப்பன் அப்பா எடுத்து வந்திருந்த நிலக்கடலைகளை வாயில் வைத்து கடித்துக்கொண்டிருந்தான். ஆவணியப்பன் அந்த கிரமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கிறான். காமராசு காலத்தில் கொண்டுவரப்பட்ட பள்ளி அது. ஒருவேளை அது இல்லாமல் இருந்திருந்தால் இந்த ஊரில் பலபேர் ஆரம்ப பள்ளிக்குகூட  சென்றிருக்க வாய்ப்பில்லை. 

தங்கை கண்ணகியும் சேந்தனும் நொச்சநல்லூரில் படிக்கிறார்கள். கண்ணகி 6ஆம் வகுப்பும் சேந்தன் 8ஆம் வகுப்பும் படிக்கிறார்கள். நடப்பது என்பது அந்த வீட்டிற்கே உரிய சொத்து. அப்பா நாள் முழுதும் ஊரை சுற்றி நடந்து காவல் காக்கிறார். அம்மாவின் பயணம் ஆடு , மாடுகளின் பின்னே செல்கிறது. சேந்தனும், கண்ணகியும் தினந்தோறும் 7 கி. மீ தொலைவில் உள்ள நொச்சநல்லூருக்கு படிப்புக்காக நடக்கிறார்கள். தினந்தோறும் 14 கி. மீ நடக்க வேண்டும். 

சேந்தன் 10ஆம் வகுப்பு படிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் இருக்கிறது. அதற்குள் அவன் நினைப்பதுபோல் ஆசிரியர் குமரப்பனின் பழைய மிதிவண்டியை வாங்கிவிட வேண்டும். இல்லையெனில் 11ஆம் வகுப்பு படிக்க ஆவணிபுரம் செல்வது கேள்விக்குறியாகிவிடும். ஆவணிபுரம் நொச்சநல்லூரில் இருந்து 10 கி. மீ. வீட்டிலிருந்து மொத்தம் 17 கி. மீ பயணிக்க வேண்டும். பேருந்து வசதி கிடையாது. தேவை என்றால் நடந்தோ அல்லது மிதிவண்டியில்தான் செல்லவேண்டும். இந்த சிக்கலினாலேயே அந்த ஊரில் பலர் 10ஆம் வகுப்பை தாண்டவில்லை. 

குடும்பத்த்தில் வறுமை நிறைந்திருந்தாலும் சேந்தன் நன்றாக படிப்பவன். வகுப்பில் முதல் 10 இடங்களுக்குள் வந்துவிடுவான். வீட்டில் படிப்பதற்கு குறைவான நேரம் கிடைத்தாலும் அதை சரியாய் பயன்படுத்திக்கொண்டு படிப்பவன். அவன் கவலையெல்லாம் இன்னும் இரண்டு ஆண்டில் அவன் சேர்க்கப்போகும் பணம்தான். அதைவைத்துதான அவன் அந்த பழைய மிதிவண்டியை வாங்க வேண்டும் என்று நினைத்திருக்கிறான்.  தினமும் பள்ளிக்கு செல்லும்போது அந்த ஊர் மக்களுக்கு   நொச்சநல்லூரில் ஏதாவது வேண்டும் என்றால் அவனிடம் வாங்கிவர சொல்வது வழக்கம். அப்படி வாங்கி வந்து கொடுக்கும்போழுது  பலர் அவனுக்கு ஒரு சிறு தொகையை ஊதியமாக கொடுப்பார்கள். அவன் வாங்கி வந்து கொடுக்கும் பொருளின் எடையை பொறுத்து ஊதிய அளவு மாறுபடும். இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக காசு  சேர்ப்பான். இதையன்றி சனிக்கிழமையானால் அவனுக்கு 2 ருபாய் ஆசிரியர் குமரப்பன் வாயிலாக கிடைப்பது உறுதி. 

சனிக்கிழமையானால் காலையிலே சேந்தன் ஆசிரியர் குமரப்பன் வீட்டிற்கு செல்வான். அவர் அவருடைய பழைய மிதிவண்டியையும், சில புத்தகங்களையும் கொடுப்பார். அதை எடுத்துக்கொண்டு அவன் ஆவணிபுரம் நூலகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு அந்த புத்தகங்களை கொடுத்துவிட்டு அவர் எழுதிக்கொடுக்கும் புத்தகங்களை எடுத்து வர வேண்டும். காலையில் புறப்பட்டால் வீடு வந்து சேர மதியதிற்கு மேல் ஆகிவிடும். வீட்டிற்கு வந்ததும் 2 ரூபாய் ஊதியமும் படிப்பதற்கு ஓரு புத்தகமும் கொடுப்பார்.


சேந்தனுக்கு புத்தகம் வசிப்பது மிகவும் பிடிக்கும் என்பதாலும் அவனுக்கு 2 ரூபாய் கிடைக்கிறது என்பதாலும் அவன் வாரம்தோறும் அந்த பணியை செய்ய தவறுவதில்லை. இப்படி ஒரு முறை நூலகம் சென்று திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில் மிதிவண்டி பழுதாகி பாதியில் நின்றுவிட்டது. வண்டியை தள்ளிக்கொண்டே வீடு வந்து சேரவேண்டியதாகி விட்டது. ஆசிரியர் அன்று அவனுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தார். பழுதாகி நின்ற வண்டியை பார்த்துக்கொண்டே ஆசிரியர் "இந்த வண்டியை யாராவது கேட்டால் விற்றுவிட வேண்டும்" என்று கூறினார். அன்றுதான் அவனுக்கு அந்த வண்டியை எப்படியாவது நாம் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அப்படி வாங்கிவிட்டால் அவன் 11ஆம் வகுப்பு படிக்க போவது உறுதி, இல்லயென்றால் மற்றவர்களை போல் தானும் படிக்காமல் போக நேரிடும் சூழ்நிலை ஏற்படலாம்.


சேந்தன் பள்ளிக்கு மிக குறைந்த அளவே புத்தகங்களை எடுத்துச்செல்வது வழக்கம். அப்படி செய்தல்தான் மாலை வீடு திரும்போபோது நிறைய பேருக்கு நிறைய பொருள்களை வாங்கி தூக்கிவரமுடியும். இதனால் புத்தகங்கள் எடுத்து செல்லாமல் சில நேரம் ஆசிரியரிடம் தண்டனை பெறவும் நேர்ந்தது.

இப்படியே நாட்கள் நகர அவன் 9ஆம் வகுப்பு சென்றான். அப்பொழுது அவனிடம் மொத்தமாக 396 ருபாய் சேமிப்பு இருந்தது. இன்னும் 400 ரூபாய் சேர்த்துவிட்டால் ஆசிரியரிடம் இருந்து அந்த பழைய மிதி வண்டியை வாங்கிவிடலாம். ஆசிரியர்  குமரப்பன் ஒருநாள் இந்த வண்டி 800 ரூபாய்க்கு விலை போகும் என்று சொன்னது நினைவில் வந்தது. 

அன்று ஞாயிற்றுக்கிழமை, செந்தாமரை பிள்ளைகளுக்கு சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தாள். வெளியில் காளி அண்ணனின் குரல் பலமாக கேட்டதை கண்டு அம்மா வெளியே ஓடினாள். சேந்தனும் மற்றவர்களும் அம்மாவிற்கு பின்னால் ஓடினார்கள். வெளியே அப்பா முனியப்பன் காளி அண்ணன் தோளில் கண்களை மூடி சாய்ந்து கிடந்தார். செந்தாமரை பதறிக்கொண்டே "என்ன ஆச்சு காளி அண்னே.." என்று கதறினாள். அப்பாவை பாம்பு கடிதத்தை காளி அண்ணன் கூறியபோது அம்மா அந்த தெருவே கேக்கும்படி அலறினாள். 



சேந்தன்தான் ஓடிப்போய் ஆசிரியர் மிதி வண்டியை எடுத்துக்கொண்டு பக்கத்துக்கு ஊரில் இருக்கும் முருகப்பனின் காரை அழைத்துகொண்டுவந்தான். நல்ல வேலையாக அன்று முருகன் எங்கும் போகாமல் வீட்டில் இருந்ததால் உடனே அழைத்துவரமுடிந்தது. இல்லயென்றால் நிலைமை மோசமாகி இருக்கும். 

காரில் சேந்தனையும் அம்மா கூடவே அழைத்துக்கொண்டு சென்றாள். காளி அண்ணனும் கூடவே வந்தார்.  காலதாமதம் இல்லாமல் அப்பாவை அழைத்து சென்றதால் ஆபத்து எதுவும் இல்லை என்றார் மருத்துவர். 
ஆனால் அங்கயே ஒரு வாரம் தங்கவேண்டி இருந்தது. சேந்தன் மட்டும் காளி அண்ணாவோடு முருகப்பன் காரில் வீட்டிற்கு வந்தான். அம்மா அப்பாவுடன் தங்கிவிட்டார். ஆசிரியர் குமரப்பன் தனது மிதிவண்டியை அந்த ஒரு வாரமும் சேந்தனுக்கு கொடுத்து உதவி செய்தார். 

அடுத்த ஞாயிறு மருத்துவர் அப்பாவை வீட்டிற்கு அழைத்து செல்ல அனுமதித்தார். மருத்துவமனையில் கட்டணத்தை முதல் நாளே சொல்லியிருந்தார்கள். 750 ரூபாய் கட்டணம். அம்மா அங்கும் இங்கும் அலைந்து 500 ரூபாய் சேர்க்க முடிந்தது. முருகப்பனுக்கு கார் வாடகையாக 150 கொடுக்கவேண்டும். மொத்தமாக ரூபாய் 900 இருந்தால்தான் சமாளிக்கமுடியும். அம்மா திகைத்து கண் கலங்கி நின்றபோது சேந்தன் தன்னிடம் இருந்த 396 ரூபாயையும் அம்மாவிடம் கொடுத்த்தான். அம்மா அழுதுக்கொண்டே சேந்தனிடம் இருந்து அந்த பணத்தை வாங்கிக்கொண்டாள். அவளுக்கு நன்றாக தெரியும் எவ்வளவு கடினப்பட்டு அந்த பணத்தை சேந்தன் சேமித்தான் என்று. ஆனால் இப்பொழுது வேறு வழியில்லை. 

சேந்தனுக்கு அந்த பணத்தை அம்மாவிடம் கொடுத்ததில் எந்த வருத்தமும் இல்லை. தன்னால் இந்த நேரத்தில் உதவ முடிந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைத்தான். இன்னும் ஒரு ஆண்டுக்குள் எப்படியாவது தன்னால் அந்த மிதி வண்டியை வாங்குவதற்கு தேவையான பணத்தை சேமிக்க முடியும் என்பது அவன் கண்களில் ஒளிர்ந்தது.  

"அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் 
பெருமை முயற்சி தரும்"   

என்ற திருவள்ளுவரின் குரல், தான் கடைசியாக படித்த புத்தகத்தில் இருந்து சேந்தனுக்கு நினைவுக்கு வந்தது.

0 comments:

Post a Comment



 

different paths

college campus lawn

wires in front of sky

aerial perspective

clouds

clouds over the highway

The Poultney Inn

apartment for rent